Pages

Tuesday, January 25, 2011

துவங்கியது த்ரி இடியட்ஸ்...
ஊட்டியில் ஷங்கர், ஜீவா, ஸ்ரீகாந்த்!
ஒருவழியாக ஆரம்பித்துவிட்டார்கள் ஷங்கரின் த்ரி இடியட்ஸ் படத்தை! பெரும் இழுபறியாக இருந்த இந்த படம் கை கழுவப்பட்டுவிட்டது என்றே பலரும் கிசுகிசுத்து வந்தார்கள்.
முதலில் இப்படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பின்பு கடைசி நேரத்தில் அவராகShankarவிலகிக் கொண்டார் என்றும், இல்லையில்லை... படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. விஜய்க்கு பதிலாக சூர்யாவை நடிக்க வைக்கிற முயற்சியில் வெற்றியும் கண்டார் ஷங்கர். அதிலும் ஒரு சின்ன இழுபறி. தெலுங்கு, தமிழ் இரண்டு மொழி தயாரிப்பில் தமிழை மட்டுமாவது எங்கள் உறவினர் ஞானவேல் தயாரிக்கட்டும் என்று சூர்யா ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அப்புறம் அதையும் முறியடித்து இன்று படப்பிடிப்பை துவங்கிவிட்டார் ஷங்கர்.
ஊட்டியில் இன்று நடைபெறும் படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்ட பின் அடுத்த மாத இறுதியில் கலந்து கொள்கிறாராம் சூர்யா.
ஏதேதோ தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் முறையான அறிவிப்போடு தலைப்பும் வெளியிடப்படுமாம்.

Monday, January 24, 2011

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினிக்கு ஜோடி ஆகிறார் த்ரிஷா..



சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன.

ரஜினிக்கு ஜோடி த்ரிஷா

சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது. சில காட்சிகளில் நடிகை நடிக்க த்ரிஷாவை கேட்டுள்ளனர். டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். 

Sunday, January 23, 2011

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்


சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன.
அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி :
விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.
அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.
ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.
இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.

Friday, January 21, 2011

வெற்றிமாறனின் அசத்தலான 'ஆடுகளம்!'


வெற்றிமாறனின் கதைக்களம், கதை சொல்லும் உத்தி, டீட்டெயிலிங், கதா பாத்திரங்களின் குணவியல்புகளின் சித்தரிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

பொல்லாதவன் படம் இறுதிக்காட்சியில் தொடங்கும். தனுஷ் 'எல்லாம் இந்த பைக்கால தான்' என்று சொல்லும்போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது, யோசிக்கவைத்தது! ஒரு புதிய களத்தில், நிழல் உலகம் பற்றி, ஒரு உலக சினிமா போன்ற லாவகத்துடன் பயணிக்கும் கதையில் தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் மற்றும் ஒற்றை ஆளாக தனுஷ் பலரைப் போட்டுப் புரட்டி எடுக்கும்போதே அது தமிழ் சினிமாவானது!

பொல்லாதவன் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை, ஒரு மசாலாப் படமாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. நான் பொல்லாதவன் நல்ல படம் என்று சொன்னபோது சில நண்பர்கள் பார்த்த பார்வை அப்படியே தோன்றியது.    

ஆடுகளம் 
பொல்லாதவன் போலவே இறுதிக்காட்சியில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது!

-எப்போதும் அடிக்கிறாய்ங்க, கொல்றாய்ங்க என்று சண்டைக்கு ரெடியாக பொருளுடன் அலைவது.
-போவோர் வருவோரிடம் 'லந்து' கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு காரெக்டர்
-நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேசுதல் அல்லது இடைவெளி விடாமல் பேசுதல்
என்ற வழமையான மதுரை டெம்ப்ளேட் படங்களில் இருந்து வேறுபட்டு, புதிய களத்தில்.

சேவற்சண்டையை ஒரு பொழுபோக்காக கொள்ளாமல் தமது வாழ்க்கை, தன்மானம், கௌரவம் எல்லாவற்றையும் அதனூடாகவே பார்க்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

தனி ஒரு மனிதனின்(பேட்டைக்காரன்) தான் சீடன் தன்னை மிஞ்சிவிட்டான், தான் உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம், அவமான உணர்வின் வலி, தொடரும் சில நிகழ்வுகளால், வன்மமாக மாறி, பழிவாங்கலாக முடியும்போது அது சிலபேரின்(கருப்பு, பேட்டைக்காரன், மீனாள், ஐரீன், துரை, ஊளை) வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பேசுகிறது படம்.

பேட்டைக்காரன் - ஜெயபாலன்  
இவரின் பார்வை ஒன்றே எல்லா செய்திகளையும் அநாயாசமாகக் கூறிச்செல்கிறது, அரையிருட்டான காட்சிகளில் வன்மம், குரோதம் பளபளக்கும் கண்களில். இறுதிக்காட்சியில் ஆற்றாமை, குற்றவுணர்வு எல்லாமே கண்களில்.

கருப்பு - தனுஷ் 
புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தனுஷின் திறமைக்கு தீனி போடும் ஒரு அருமையான வாய்ப்பு. எப்பொழுதுமே தனுஷ் ஒரு டைரக்டரின் ஆளுகைக்குட்பட்ட நடிகராகவே இருப்பது அவரின் பிளஸ். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வெள்ளந்தியான மனதுடன், விசுவாசம், கொண்டாட்டம் என்று மனிதர் அசத்துகிறார்.

துரை - கிஷோர் 
எந்த இடத்திலும் மிகைப்படாத ஒரு நடிப்பில். ஒரு அண்ணன் போல கருப்புவிற்காக பேட்டைக்காரனிடம் பரிந்து பேசுவதில், அவனுக்கு வாழ்க்கையில் செட்டிலாக வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிந்ததும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்ளச் செய்வது, கருப்பு ஓவராகப் போவது போல தெரிந்தால் அடக்கி வைப்பது என மிகக் கச்சிதமான நடிப்பு! பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு படங்களிலும் அசத்தியிருக்கும் என்னைக் கவர்ந்த, தமிழ் சினிமாவினால் நன்றாகப் பயன்படுத்தப்படாத ஒரு நடிகர்.
          
கருப்புவின் தாய், மீனாள், அயூப், ஊளை, ஐரீனின் நண்பன், போலீஸ் அதிகாரி என்று எல்லோரும் நிறைவாக! முதல் பாதியில் பெரும்பான்மை பாத்திரங்களின் டீட்டெயிலிங்கிலேயே சென்று விடுவதால் நீளமாய் இருப்பதுபோல தோன்றினாலும் இந்த மாதிரியான கதைக்கு அது தவிர்க்க முடியாதது, அவசியமானதாகவே தோன்றுகிறது.

அசத்தலான சேவல் சண்டைக்காட்சிகள், ஒரு ஹீரோ - வில்லனின் சண்டைக்காட்சிகளுக்கு நிகராக, 'சீட்' நுனிக்கு ரசிகர்களை கொண்டுவருவது போல. படத்தில் அதைப்போல் மனிதர்களின் சண்டை கவரவில்லை என்பதற்கு திரையரங்கில் சேவற்சண்டையின்போது நிலவும் நிசப்தமே சான்று.

சில இடங்களில் குறிப்பாக இறுதிச் சண்டைக்காட்சியில் கருப்புவின் சேவல் தலையைக் குனிந்து கொண்டு பார்க்கும் காட்சியில், சில இரத்தம் தெறிக்கும் காட்சிகளில் மட்டுமே கிராபிக்ஸ் என்பதை உணர முடிகிறது!

ஒரு காட்சியில் சண்டையை நேரடியாகக் காட்டாமல், சுற்றி நிற்கும் மனிதர்களின் முகங்களில் தெரியும் உணர்வுகளின் மூலம் சண்டையின் போக்கு சொல்லப்படுதல் அருமையான உத்தி.

முதலில் இன்னொருவனின் தொல்லையிலிருந்து தப்ப கருப்புவைக் காதலிப்பதாகச் சொல்லும் ஐரீன் பின்பு நண்பர்களாக இருப்போமென்று கூறுவது வரை சரியே.பின்பு ஏன், எப்படி காதலியானாள் என்பது அழுத்தமாக கூறப்படவில்லை. அதுவும் கருப்பு மூன்று லட்சம் ஜெயித்த பின்பு காதலை ஏற்றுக்கொள்வது...'தப்பா தெரியுதே மாப்ள!'.

இந்தப்படத்திலும் (பொல்லாதவன் போலவே) காதல் தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது! ஆனால் காதல் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாகவே! குறிப்பாக 'யாத்தே யாத்தே' பாடலில் தனுஷின் ஆட்டம், நிலைகொள்ளாமல் நகரும் காமெரா என அதிலுள்ள உற்சாகமான கொண்டாட்டமான மனநிலை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது!

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை ஓக்கே! சில இடங்களில் குறிப்பாக சேவற்சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது! எங்கோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசித்த போதே பார்த்தி சொன்னான் Pirates of the Caribbean, Gladiator படங்களில்....!

வழமையான தமிழ் சினிமாவில் வரும் சில எதிர்பார்ப்புகளைத் தூண்டும் காட்சிகள் வந்து, ஆனால் அப்படி நிகழாமல் செல்வதே புதுமையாக உள்ளது. பந்தயத்தில் தோற்று மொட்டையடிக்கும் போலீஸ் அதிகாரி, பேட்டைக்காரனின் உண்மையான முகத்தை அறியும் கருப்பு என்ன செய்கிறார்கள் என்பதே அது.

ஒரு மோசமான ஒளி, ஒலியமைப்புள்ள திரையரங்கில் பார்த்ததால் படசான்றிதழே இருட்டாக, பிறகு படம்வேறு இரவுக்காட்சிகள் அதிகமா, மொத்தத்தில தியேட்டர்லயே திருட்டு DVDல பார்த்த எபெக்ட். ஒரிஜினல் DVD வந்ததும் வாங்க வேண்டும்! 

மொத்தத்தில தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அருமையான படைப்பு! நல்ல படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்!

சிறுத்தை



தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தை நாடி பிடித்து அறிவதற்கும் வெற்றிகள் தொடர்ந்துவரும்  நிலையில் தமது அடுத்த கட்ட உயர்ச்சியாக வெளிப்படுத்தவும் பயன்படுத்தும் இரட்டை வேடத்தை கார்த்தி பத்துப் படங்களுக்குள்ளேயே ஏற்றுள்ள படம் சிறுத்தை.

இதுவரை கார்த்தி நடித்துள்ள எந்தவொரு படமும் படுதோல்வி ஆனதில்லை என்ற தயாரிப்பாளரின் நல்ல பிள்ளைப் பெயரோடு மீண்டும் ஒரு மசாலா கலவை.

தெலுங்கு மெகா ஹிட் திரைப்படமான விக்க்ரமார்க்குடுவை சுட சுட ரீமேக் செய்து தமிழில் அந்த சூடு குறையாமல் தந்துள்ளார்கள்.

பட ஆரம்பத்திலேயே ஆந்திரப்பக்கம் நடைபெறுவதாகக் கதை இருந்தாலும் புரிவதற்காக பாத்திரங்கள் தமிழில் பேசுவதாக அறிவித்தல் போட்டு லாஜிக் மீறல் என்ற பேச்சு இல்லாமல் செய்கிறார்கள்.

ஆனால் படத்தில் ஆங்காங்கே வரும் முழக் கணக்கான அல்ல கூடை,லொறிக் கணக்கான பூச்சுற்றல்களை எல்லாம் கல கலப்பாகப் படம் செல்வதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
(மவனே சீரியசாப் பஞ்ச வசனம் பேசி இருந்தால் மட்டும் தாங்கி இருக்கவே முடியாமல் போயிருக்கும்)

கார்த்தி நேரெதிர் பாத்திரங்கள் இரண்டில்..
வழமையான கார்த்தியின் கலகல காமெடி பாத்திரம் ராக்கெட் ராஜாவாக சந்தானத்தொடு கல கல + இடுப்பு அழகி தமன்னாவுடன் கிளு கிளு...
நான் மகான் அல்ல இரண்டாம் பாதியில் பார்த்த சீரியசான + இறுக்கமான கார்த்தியாக நேர்மை+துணிச்சலான ரத்தினவேல் பாண்டியன் IPS ஆக விறுவிறு..
                                ஜிந்தாக்கா ஜிந்தா குத்து - ராக்கெட் ராஜா 

பரட்டைத் தலையும் தாடி மீசையுமாக கண்களில் திருட்டு முழியும் உதடுகளில் சதா வழியும் புன்னகையுமாக அலையும் ராக்கட் ராஜாவாகட்டும், கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக விறைப்பும் மிடுக்குமாக நிமிர்ந்த நெஞ்சோடும் தீர்க்கமான பார்வையோடும் முறுக்கு மீசையோடும் ரத்தினவேல் பாண்டியனாகட்டும் 'சிறுத்தை'யில் விஸ்வரூபமெடுத்து சிம்மாசனம் போட்டு இருக்கிறார் கார்த்தி.

மசாலாத்திரைப்படங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான அத்தனை விஷயங்களையும் அழகாக வெளிப்படுத்தித் தன்னை நிரூபிக்கிறார் கார்த்தி.
அண்ணன் சூர்யாவை விடக் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார்.
இயல்பான நகைச்சுவையில் சந்தானத்தையும் விஞ்சுகிறார்.

சரியான கலவையை இயக்குனர் சிவா வழங்கி இருக்கிறார். கார்த்தியும் வெளுத்து வாங்கி விருந்து படைத்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை ஒரே எட்டில் சிம்பு,தனுஷ்,ஜீவா வகையறாக்களைத் தாண்டி அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் ஆகியோருக்கு அடுத்ததாக துண்டு போட்டிருக்கிறார் இந்தப் பருத்திவீரன்.
மிடுக்கு 

பருத்திவீரனில் ரசித்த பிறகு அனேக காட்சிகளில் கார்த்தியை ரசித்தேன்..
நான் மகான் அல்ல பார்த்த பிறகு பலரிடமும் நான் சொன்னது - கார்த்தி ஒரு போலீஸ் பாத்திரம் ஏற்றால் பின்னுவார் என்று.. நடந்திருக்கிறது.

படம் பார்க்க சென்ற ஈரோஸ் அரங்கில் ஆச்சரியமாக கார்த்தியின் ஆளுயர கட் அவுட்டுகள்.
படம் ஆரம்பித்தவுடனும் கார்த்தியின் பெயர் காண்பிக்கப்பட்டவுடனும் கரகோஷம்+காதைக் கிழிக்கும் விசில்கள்...
ம்ம்ம்ம்.. கார்த்தி மாஸ் ஆகிவிட்டார்.

வில்லன்கள் கொடூரம் என்பதை விட கோமாளித்தனம்.. ஆனால் கார்த்தியினாலும் அக்ஷன் சரவெடிகளாலும் ரசிக்க வைக்கின்றன வில்லன் - ஹீரோ மோதல்கள்.
சந்தானம் - நவீன கால கவுண்டமணி. ஹீரோவைக் கிடைக்கும் இடைவெளியில் ஓவர் டேக் பண்ணிவிடக் கூடிய அசத்தல் நக்கல்,நையாண்டிகள்.

கார்த்தியுடன் காட்டுப்பூச்சியாக சந்தானம் போடும் ரகளையில் திரையரங்கே கலகலக்கிறது.
இடைவேளைக்குப் பின்பும் சந்தானத்தின் ஆட்டம் கலக்கல்.

தமன்னா பாவம்.. ஆனந்தத் தாண்டவம் மதுமிதா முதல் லூசுப் பெண்ணாகவே இவரை மாற்றிவிட்டார்கள். ஒரு சம்பவத்துடன் ஒரு பொறுக்கி என்று ஊகிக்க்கூடியளவு அறிவில்லாதவரா என்று பரிதாபம் தான் வருகிறது.
வெளிறிய வெள்ளை வெளேர் இடுப்பை அடிக்கடி காட்டி ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.
                                இடுப்பு 

போலீசின் குட்டி மகள் அழகாக இருக்கிறாள். பாவமாக இருக்கிறது.மகள் சென்டிமெண்ட்..
பையா தறுதலை கார்த்தியைத் தந்தையாகக் காட்டியபோதும் அதற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

முதல் பாதியின் நகைச்சுவைகளும் நையாண்டி வசனங்களும் ரசிக வைத்தது போலவே, இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியசான சில பிளாஷ்பக்குகளின் செண்டிமெண்ட்,சவால்,உணர்ச்சி மிகு வசனங்களும் ரசிக்க வைப்பன.
போலீஸ் கார்த்தி பயம் பற்றி சொல்லும் இடமும் போலீஸ்காரர்கள் பற்றி நீளமாகப் பேசும் இடமும் டச்சிங்.

இன்னும் சில வசனங்கள் நிறையப் பழைய உணர்வுகளைக் கொஞ்சம் கிளறிவிட்டன.
'அண்ணன் வருவார்'
'அண்ணன் வந்திட்டார்'
'தாயைக் கூட்டிக் கொடுத்தவனும் தலைவனைக் காட்டிக் கொடுத்தவனும் நல்லா வாழவே மாட்டான்'

வித்யாசாகரின் இசையில் எல்லாப் பாடலுமே முன்பே ஹிட. படத்தில் இன்னும் ரசிக்க வைத்துள்ளார்கள். ஆனால் எல்லாப் பாடலையுமே தெலுங்குப் பாணியிலேயே கலர் கலராய் சிங்கு சக்கா போட்டிருப்பது தான் கொஞ்சம் அன் சகிக்கபில்.

இன்னொரு ரசிக்க வைத்த விடயம்.. இது ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் இருக்கிறதா எனப் பார்த்தவர்கள் தான் சொல்லவேண்டும்..
அந்த 'ஜிந்தாக்கா தக்கா தக்கா' கைகள் கும்மும் விளையாட்டு.. கலாய்த்தலாக ஆரம்பித்து கடைசிக் காட்சி வரை கலக்குகிறது.

இடைவேளைக்குப் பிறகான சீரியஸ் ப்ளாஷ் பக்கினால் ரொம்பவே சீரியஸ் ஆகாமல் கல கல ராக்கெட் ராஜாவை வைத்து சிரிப்பாகவும் நையாண்டியாகவுமே வில்லன்களை ஐடியாக்கள் மூலமாகக் கவிழ்ப்பதும் ரசிக்கவைக்கும் டெக்னிக்.

இப்படி பல காட்சிகளை ரசித்து சிரிக்கலாம்..

அளவான காரம், சிரிப்பு,ரசிப்பு மசாலா தடவி வந்துள்ள பொங்கல் படையல் சிறுத்தை சிரித்து ரசிக்க சூப்பர் படம்.

சிறுத்தை - சீறுகிறது.

 சிரிப்பதற்காக மீண்டும் ஒரு தடவை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.. ஓசி டிக்கெட் தானே.. யார் யார் வாறீங்க?

* ரத்தினவேல் பாண்டியனின் மிடுக்குப் பார்த்து மீண்டும் மீசையை முறுக்கலாமா என்று ஒரு ஆசை.. ;)

காவலன் – கனிவும், கவனமும் மிகுந்த காதலன் (விமர்சனம்)

அழகிய தமிழ்மகன் படத்தில் ஆரம்பித்து குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா வரை விஜயை பிடித்த கிரகம்,
காவலனோடு விலகி விட்டதோ என்னவோ…! மனிதர், மனதைக் கசிய வைக்கும் காதல் கதையில் கோந்து மாதிரி ஒட்டிக்கொண்டு நடித்திருக்கிறார். பெரிய ஆச்சர்யம்! இத்தனை பெரிய மாஸ் ஹீரோவான விஜய், கடந்து போன அவரது பத்து படங்களில் நடிகர் விஜயாகத்தான் தெரிந்தாரே தவிர, மருந்துக்கும் கதாபாத்திர வாசனையை அவரிடம் காணோம். அந்த மேஜிக் காவலனில் நிகழ்ந்து விட்டது!

காவலன் படத்தின் சண்டைக் காட்சிகளில் கூட  விஜயை பூமிநாதன் என்ற கதாபாத்திரமாக  ரசிகனை உணர வைத்திருப்பது இயக்குனர் சித்திக்கின் திறமை. அதேபோல விஜயின் படத்தில் சுத்தமாய் கதை இல்லை என்று குற்றப்பத்திரிகை வாசித்த அத்தனை பேரும் காவலனை பார்த்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வார்கள். விஜயை வறுதெடுத்த விமர்சகர்கள் காவலனை கிழிக்க முடியாதே என்ற கடுப்பில் இருப்பார்கள். இப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையில் நம்ம விமர்சனம் இல்லாவிட்டால் எப்படி?

சொந்த ஊரில்  முஷ்டியை மடக்கி, அடிதடி… அடிக்கடி… என்று தலைவலி தரும் பூமிநாதனை(விஜய்), தனது நண்பர் முத்துராமலிங்கத்திடம்(ராஜ்கிரண்) பாடிகார்ட் வேலைக்கு அனுப்புகிறார் அவனது மாமா. ஆனால் வந்த இடத்தில், உயிருக்கு ஆபத்துள்ள தனது மகள் மீராவுக்கு(அசின்) பாடி கார்டாக நியமிக்கிறார் முத்துராமலிங்கம். ரொம்பவே கண்டிப்பாக இருக்கும் பாடிகார்டால் தனது சுதந்திரம் பறிபோனதாக நினைக்கும் மீரா, அவன் உறுதியை அசைத்துப் பார்க்க நினைக்கிறாள்.
இதற்காக அம்முக்குட்டி என்ற கற்பனை பெயரைச் சொல்லி அவனைக் காதலிப்பதாக காலர் ஐடியை கட் பண்ணிவிட்டு  போன் வழியே விளையாட ஆரம்பிக்கிறாள். முதலில் பிடிகொடுக்காத பூமிநாதன் ஒரு கட்டத்தில் முகம் தெரியாத அந்த அம்மு குட்டியிடம் மனதை பறிகொடுகிறான். மீராவோ தனக்கு காவலனாக மட்டுமல்ல, காதலியைப் பார்க்காத நிலையிலும் தனது காதலில் அவன் காட்டும் நேர்மை, தவிப்பு, சின்சியாரிட்டியைப் பார்த்து அவன் மீது நிஜமாகவே காதல் பிறக்கிறது. அம்முக்குட்டி நான்தான் என்பதை மீரா வெளிபடுத்தினாளா? பூமிநாதன் தனது காதலியை கண்டு பிடித்தானா என்பதுதான் காவலன் படத்தின் அவுட்லைன்.

அடடா இவ்வளவுதானா  கதை…! ரொம்ப சிம்பிளா இருக்கே என்றால், சித்திக் இந்தக் கதையை சுவையாகச் சொல்ல வடிவமைத்த திரைக்கதை அபாரம். சிடுக்கோ சிக்கலோ இல்லாத அந்தத் திரைக்கதைப் பின்னலுக்கு வலுச்சேர்க்கும் துணைக் காதாபாத்திரங்கள் எடுக்கும் சுயநலமான முடிவுகள், கதையோட்டத்தின் முக்கியமான திருப்பங்கள் ஆகிவிடுவதில் படம் முழுவதும் சித்திக் முத்திரை கொட்டிகிடக்கிறது. குறிப்பாக திரைக்கதையில் ஒரே சிரான இடைவெளியில் நிகழும் திருப்பங்கள், 100 விழுக்காடு லாஜிக்கோடு இருப்பது காதாபாத்திரங்களை உயிருள்ளதாக்கி விடுகிறது. உதாரணத்துக்கு மீராவின் தோழி மது எடுக்கும் முடிவு, ஒரு எளிய காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி விடுகிறது.

ஒரு மாஸ் ஹீரோவுக்கான  ஆக்‌ஷன் பேக்-அப் காவலனிலும் உண்டு. ஆனால் அளவாக கதையோட்டத்தில் சரியாக தேவைபடுகிற இடத்தில் எங்கேயும் திணிக்கப்படாததாக இருக்கிறது. பாடல்களுக்கான சூழ்நிலைகளும் அப்படியே! விஜய்கான வழக்கமான அறிமுகப் பாடலைப்போல இல்லாமல்இ கதையின் போக்கில் 35 நிமிடங்களுக்கு பிறகே வருகிறது வின்னைக் காப்பான் என்ற மாஸ் ஹீரோவுக்கான தத்துவப்பாடல். அந்தப்பாடலின் முடிவில் கதையும் நகர்வதால் அதை திணிப்பு என்று தெரியாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர். சண்டைக்காட்சிகளின் அதீதமும் அடக்கி வாசிக்கப்பட்டு இருக்கிறது.

இனி விஜயின்  கதாபாத்திரத்துக்கு வருவோம். ஒரு பாடிகார்டுக்கு இருக்க வேண்டிய கட்டான,  அதேநேரம் சிக்ஸ் பேக்ஸ் என்று உடலை அலங்கோல சதை பிண்டமாக்கி  விடாமல் சிக்கென்று தன்னை  தயாரித்துக்கொண்டிருக்கும்  விஜய், அசினை விட அழகாகத்  தெரிகிறார் என்பது ஆச்சர்யம்! குறிப்பாக பாடிகார்டுக்கான யூனிஃபாம், ஜிகினாத் தனம் இல்லாத நவீனமும், இளமையும் தெறக்கும் உடைகளில் விஜய் பசைமாதிரி ஒட்டிக் கொண்டு விடுகிறார்.
அடுத்து உடல்மொழி. கண்டிப்பான. கவனமான பாடி கார்டாக அசினையும், மித்ராவையும் பின்தொடரும்போதும் விறைத்த ராணுவ வீரனைபோல விஜய் காட்டும் மிடுக்கும், பாடிகார்ட் வேலை முடிந்து வீடு வந்தபிறகு அப்பாடா என்று அவர் காட்டும் நெகிழ்வான உடல்மொழியும் என்று ரொம்பவே கவனித்து செய்திருக்கிறார்.

லுக்குகள் மற்றும்  எக்ஸ்பிரஸன்களைப் பொருத்தவரை  நடிப்பில் நிறையவே தேறியிருக்கிறார் விஜய். முதலில் தன்னை காதலிப்பதாகச்  சொல்லும் அம்முக்குட்டியை  மிரட்டும்போதும்இ பிறகு  அம்முகுட்டி “ எதுக்கு  இந்த மீரா பின்னாடி அவ வால் மாதிரி சுத்திகிட்டே இருக்க? அவ என்ன அவ்வளோ பெரிய ஆளா? அவளைப்பத்தி சொல்லேன் தெரிஞ்சுகிறேன். ” என்று கேட்கும்போதும்  மீராவின் ஜென்டில்னெஸ்களை  விஜய் இயல்பாக அடுக்கும்போதும், பிறகு பொட்டானிக்கல் கார்டனில்  அம்முக்குட்டியைப் பார்க்க  மீராவிடம் ஒத்திகை பார்க்கும் போதும்இ காதலியைப் பார்க்க முடியாமல் திரும்பும் போதாகட்டும் விஜய் ஒரு இடம் பாக்கியில்லாமல் பூமிநாதனாக நினைத்துக்கொண்டு இயல்பாக செய்திருக்கிறார். தனது பாத்திரத்துக்கு குரல்கொடுக்கும் போதுகூட டப்பிங்கில் கவனம் காட்டியிருக்கிறார் விஜய். மீராவுக்கும் அசினுக்கும் டூயூஸன் சொல்லித்தரும் ஆங்கில உச்சரிப்பை கவனமாக கையாண்டிருப்பதே இதற்கு சாட்சி..

வளமையை விட  சிறப்பாக, வேகத்தை மட்டும்  கருத்தில் கொள்ளாமல் பாடல்  காட்சிகளில் ஆடியிருக்கும்  விஜய்க்கு... தினேஷ், ராஜூசுந்தரம். விஷ்ணு சேனா என மூன்று பேர் டீசென்டான நடண அசைவுகளை கோரியோகிராஃப் செய்திருகிறார்கள்.

அசினைப்பொருத்தவரை 29 வயது முதுமை அவரிடம் தெரியவே  செய்கிறது. பல காட்சிகளில் ஒடுங்கிய கன்னங்களோடு வருகிறார் என்றாலும் நடிப்பில் கோட்டை விட்டு விட வில்லை. அசின் தோழியாக நடித்திருக்கும் மித்ரா குரியன் அற்புதமாக இயல்பு காட்டுகிறார். அசின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜாவக்கு அவ்வளவாக வேலையில்லை. மாறாக குறைந்த காட்சிகளில் ராஜ்கிரண் வந்து போனாலும் அவர் பேசும் குறைவான வசனங்களும், அவர் காட்டும் கம்பீரம் அவர் ஏற்றுச் செய்திருக்கும் செம்மணூர் முத்துராமலிங்கம் என்ற பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறது. மலையாளத்தில் இந்த கேரக்டரை ஏற்று நடித்த தியாகராஜனை ராஜ்கிரணோடு ஒப்பிட்டால் கிரணே ஒளிவிடுகிறார். பெரிய ஆறுதல் ராஜ்கிரணின் பின்னனியைக் காட்ட ஒரு ஐந்து நிமிஷத்தை வீனடிக்காமல் அதை அப்படியே சைலண்டாக விட்டு விடுவது!

வடிவேலுவும், அவரது  முறைபெண்ணாக வரும் நீபாவும்(மறைமுக கவர்ச்சிக்காக) கதையில்  கொஞ்சம் துருத்திக்கொண்டு தெரிவதை தவிர்த்திருக்கலாம். பிரெண்ட்ஸ் படத்தில் அமைந்ததைப் போன்ற நகைசுவையை எட்டமுடியவில்லை என்றாலும் விஜய்-வடிவேலு கூட்டணி கதைக் குள்ளேயே மீறல் இல்லாம் களம் காண்பதை ரசிக்க முடிகிறது. க்ளைமாக்ஸில் வந்து மயிலிறகு போல வருடிச் செல்லும் அந்த சிறுவன் கவணிக்க வைக்கிறான்.

பொங்கலுக்கு வெளிவந்த இளைஞன் படத்துக்கும் இசையமைத்திருக்கும் வித்யாசாகர், அதில் கோட்டை விட்டு, காவலனின் கோட்டை கட்டியிருக்கிறார். ஒரு பாடல் கூட சோடை போகவில்லை  என்பதோடு எந்தப்பாடலிலும்  இறைச்சல் இல்லை. வித்யாசாகரின்  பாடல்களை படமாக்கிய விதத்தில்  மட்டுமல்ல, ஒரு மென்மையான  காதல் கதை என்பதற்கான ஓளிஅமைப்பையும், காம்போஸிசனையும் கொண்டுவந்து  விடுகிறார் ஒளிபதிவாளர் ஏகாம்பரம். பொட்டானிக்கல் கார்டனில் பூத்துகுலுங்கும் பூக்கள் அத்தனையும் சிந்தெடிக் பூக்கள் என்பது தெரியாமல் செய்திருக்கும் கலைஇயக்குனர் மணி சுசித்ராவின் கை வண்ணம் மொத்த படத்திற்கும் ரிச் லுக் கொடுத்து விடுகிறது.

காவலனுக்கு கதையும், சித்திக்கின் இயக்கமும், விஜயின்  நடிப்பும், வித்யா சாகரின்  இசையும் எத்த்னை ப்ளஸோ… அதே அளவுக்கு படத்துக்கு உயிரூட்டியிருப்பது குரு என்ற புதியவரின் வசனங்கள். மொத்தத்தில் காவலன் ரசிகர்களின்  நேரத்தை மதிக்கத் தெரிந்த  காதலின் காவலன்.