Pages

Friday, January 21, 2011


காவலன் – கனிவும், கவனமும் மிகுந்த காதலன் (விமர்சனம்)

அழகிய தமிழ்மகன் படத்தில் ஆரம்பித்து குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா வரை விஜயை பிடித்த கிரகம்,
காவலனோடு விலகி விட்டதோ என்னவோ…! மனிதர், மனதைக் கசிய வைக்கும் காதல் கதையில் கோந்து மாதிரி ஒட்டிக்கொண்டு நடித்திருக்கிறார். பெரிய ஆச்சர்யம்! இத்தனை பெரிய மாஸ் ஹீரோவான விஜய், கடந்து போன அவரது பத்து படங்களில் நடிகர் விஜயாகத்தான் தெரிந்தாரே தவிர, மருந்துக்கும் கதாபாத்திர வாசனையை அவரிடம் காணோம். அந்த மேஜிக் காவலனில் நிகழ்ந்து விட்டது!

காவலன் படத்தின் சண்டைக் காட்சிகளில் கூட  விஜயை பூமிநாதன் என்ற கதாபாத்திரமாக  ரசிகனை உணர வைத்திருப்பது இயக்குனர் சித்திக்கின் திறமை. அதேபோல விஜயின் படத்தில் சுத்தமாய் கதை இல்லை என்று குற்றப்பத்திரிகை வாசித்த அத்தனை பேரும் காவலனை பார்த்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வார்கள். விஜயை வறுதெடுத்த விமர்சகர்கள் காவலனை கிழிக்க முடியாதே என்ற கடுப்பில் இருப்பார்கள். இப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையில் நம்ம விமர்சனம் இல்லாவிட்டால் எப்படி?

சொந்த ஊரில்  முஷ்டியை மடக்கி, அடிதடி… அடிக்கடி… என்று தலைவலி தரும் பூமிநாதனை(விஜய்), தனது நண்பர் முத்துராமலிங்கத்திடம்(ராஜ்கிரண்) பாடிகார்ட் வேலைக்கு அனுப்புகிறார் அவனது மாமா. ஆனால் வந்த இடத்தில், உயிருக்கு ஆபத்துள்ள தனது மகள் மீராவுக்கு(அசின்) பாடி கார்டாக நியமிக்கிறார் முத்துராமலிங்கம். ரொம்பவே கண்டிப்பாக இருக்கும் பாடிகார்டால் தனது சுதந்திரம் பறிபோனதாக நினைக்கும் மீரா, அவன் உறுதியை அசைத்துப் பார்க்க நினைக்கிறாள்.
இதற்காக அம்முக்குட்டி என்ற கற்பனை பெயரைச் சொல்லி அவனைக் காதலிப்பதாக காலர் ஐடியை கட் பண்ணிவிட்டு  போன் வழியே விளையாட ஆரம்பிக்கிறாள். முதலில் பிடிகொடுக்காத பூமிநாதன் ஒரு கட்டத்தில் முகம் தெரியாத அந்த அம்மு குட்டியிடம் மனதை பறிகொடுகிறான். மீராவோ தனக்கு காவலனாக மட்டுமல்ல, காதலியைப் பார்க்காத நிலையிலும் தனது காதலில் அவன் காட்டும் நேர்மை, தவிப்பு, சின்சியாரிட்டியைப் பார்த்து அவன் மீது நிஜமாகவே காதல் பிறக்கிறது. அம்முக்குட்டி நான்தான் என்பதை மீரா வெளிபடுத்தினாளா? பூமிநாதன் தனது காதலியை கண்டு பிடித்தானா என்பதுதான் காவலன் படத்தின் அவுட்லைன்.

அடடா இவ்வளவுதானா  கதை…! ரொம்ப சிம்பிளா இருக்கே என்றால், சித்திக் இந்தக் கதையை சுவையாகச் சொல்ல வடிவமைத்த திரைக்கதை அபாரம். சிடுக்கோ சிக்கலோ இல்லாத அந்தத் திரைக்கதைப் பின்னலுக்கு வலுச்சேர்க்கும் துணைக் காதாபாத்திரங்கள் எடுக்கும் சுயநலமான முடிவுகள், கதையோட்டத்தின் முக்கியமான திருப்பங்கள் ஆகிவிடுவதில் படம் முழுவதும் சித்திக் முத்திரை கொட்டிகிடக்கிறது. குறிப்பாக திரைக்கதையில் ஒரே சிரான இடைவெளியில் நிகழும் திருப்பங்கள், 100 விழுக்காடு லாஜிக்கோடு இருப்பது காதாபாத்திரங்களை உயிருள்ளதாக்கி விடுகிறது. உதாரணத்துக்கு மீராவின் தோழி மது எடுக்கும் முடிவு, ஒரு எளிய காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி விடுகிறது.

ஒரு மாஸ் ஹீரோவுக்கான  ஆக்‌ஷன் பேக்-அப் காவலனிலும் உண்டு. ஆனால் அளவாக கதையோட்டத்தில் சரியாக தேவைபடுகிற இடத்தில் எங்கேயும் திணிக்கப்படாததாக இருக்கிறது. பாடல்களுக்கான சூழ்நிலைகளும் அப்படியே! விஜய்கான வழக்கமான அறிமுகப் பாடலைப்போல இல்லாமல்இ கதையின் போக்கில் 35 நிமிடங்களுக்கு பிறகே வருகிறது வின்னைக் காப்பான் என்ற மாஸ் ஹீரோவுக்கான தத்துவப்பாடல். அந்தப்பாடலின் முடிவில் கதையும் நகர்வதால் அதை திணிப்பு என்று தெரியாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர். சண்டைக்காட்சிகளின் அதீதமும் அடக்கி வாசிக்கப்பட்டு இருக்கிறது.

இனி விஜயின்  கதாபாத்திரத்துக்கு வருவோம். ஒரு பாடிகார்டுக்கு இருக்க வேண்டிய கட்டான,  அதேநேரம் சிக்ஸ் பேக்ஸ் என்று உடலை அலங்கோல சதை பிண்டமாக்கி  விடாமல் சிக்கென்று தன்னை  தயாரித்துக்கொண்டிருக்கும்  விஜய், அசினை விட அழகாகத்  தெரிகிறார் என்பது ஆச்சர்யம்! குறிப்பாக பாடிகார்டுக்கான யூனிஃபாம், ஜிகினாத் தனம் இல்லாத நவீனமும், இளமையும் தெறக்கும் உடைகளில் விஜய் பசைமாதிரி ஒட்டிக் கொண்டு விடுகிறார்.
அடுத்து உடல்மொழி. கண்டிப்பான. கவனமான பாடி கார்டாக அசினையும், மித்ராவையும் பின்தொடரும்போதும் விறைத்த ராணுவ வீரனைபோல விஜய் காட்டும் மிடுக்கும், பாடிகார்ட் வேலை முடிந்து வீடு வந்தபிறகு அப்பாடா என்று அவர் காட்டும் நெகிழ்வான உடல்மொழியும் என்று ரொம்பவே கவனித்து செய்திருக்கிறார்.

லுக்குகள் மற்றும்  எக்ஸ்பிரஸன்களைப் பொருத்தவரை  நடிப்பில் நிறையவே தேறியிருக்கிறார் விஜய். முதலில் தன்னை காதலிப்பதாகச்  சொல்லும் அம்முக்குட்டியை  மிரட்டும்போதும்இ பிறகு  அம்முகுட்டி “ எதுக்கு  இந்த மீரா பின்னாடி அவ வால் மாதிரி சுத்திகிட்டே இருக்க? அவ என்ன அவ்வளோ பெரிய ஆளா? அவளைப்பத்தி சொல்லேன் தெரிஞ்சுகிறேன். ” என்று கேட்கும்போதும்  மீராவின் ஜென்டில்னெஸ்களை  விஜய் இயல்பாக அடுக்கும்போதும், பிறகு பொட்டானிக்கல் கார்டனில்  அம்முக்குட்டியைப் பார்க்க  மீராவிடம் ஒத்திகை பார்க்கும் போதும்இ காதலியைப் பார்க்க முடியாமல் திரும்பும் போதாகட்டும் விஜய் ஒரு இடம் பாக்கியில்லாமல் பூமிநாதனாக நினைத்துக்கொண்டு இயல்பாக செய்திருக்கிறார். தனது பாத்திரத்துக்கு குரல்கொடுக்கும் போதுகூட டப்பிங்கில் கவனம் காட்டியிருக்கிறார் விஜய். மீராவுக்கும் அசினுக்கும் டூயூஸன் சொல்லித்தரும் ஆங்கில உச்சரிப்பை கவனமாக கையாண்டிருப்பதே இதற்கு சாட்சி..

வளமையை விட  சிறப்பாக, வேகத்தை மட்டும்  கருத்தில் கொள்ளாமல் பாடல்  காட்சிகளில் ஆடியிருக்கும்  விஜய்க்கு... தினேஷ், ராஜூசுந்தரம். விஷ்ணு சேனா என மூன்று பேர் டீசென்டான நடண அசைவுகளை கோரியோகிராஃப் செய்திருகிறார்கள்.

அசினைப்பொருத்தவரை 29 வயது முதுமை அவரிடம் தெரியவே  செய்கிறது. பல காட்சிகளில் ஒடுங்கிய கன்னங்களோடு வருகிறார் என்றாலும் நடிப்பில் கோட்டை விட்டு விட வில்லை. அசின் தோழியாக நடித்திருக்கும் மித்ரா குரியன் அற்புதமாக இயல்பு காட்டுகிறார். அசின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜாவக்கு அவ்வளவாக வேலையில்லை. மாறாக குறைந்த காட்சிகளில் ராஜ்கிரண் வந்து போனாலும் அவர் பேசும் குறைவான வசனங்களும், அவர் காட்டும் கம்பீரம் அவர் ஏற்றுச் செய்திருக்கும் செம்மணூர் முத்துராமலிங்கம் என்ற பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறது. மலையாளத்தில் இந்த கேரக்டரை ஏற்று நடித்த தியாகராஜனை ராஜ்கிரணோடு ஒப்பிட்டால் கிரணே ஒளிவிடுகிறார். பெரிய ஆறுதல் ராஜ்கிரணின் பின்னனியைக் காட்ட ஒரு ஐந்து நிமிஷத்தை வீனடிக்காமல் அதை அப்படியே சைலண்டாக விட்டு விடுவது!

வடிவேலுவும், அவரது  முறைபெண்ணாக வரும் நீபாவும்(மறைமுக கவர்ச்சிக்காக) கதையில்  கொஞ்சம் துருத்திக்கொண்டு தெரிவதை தவிர்த்திருக்கலாம். பிரெண்ட்ஸ் படத்தில் அமைந்ததைப் போன்ற நகைசுவையை எட்டமுடியவில்லை என்றாலும் விஜய்-வடிவேலு கூட்டணி கதைக் குள்ளேயே மீறல் இல்லாம் களம் காண்பதை ரசிக்க முடிகிறது. க்ளைமாக்ஸில் வந்து மயிலிறகு போல வருடிச் செல்லும் அந்த சிறுவன் கவணிக்க வைக்கிறான்.

பொங்கலுக்கு வெளிவந்த இளைஞன் படத்துக்கும் இசையமைத்திருக்கும் வித்யாசாகர், அதில் கோட்டை விட்டு, காவலனின் கோட்டை கட்டியிருக்கிறார். ஒரு பாடல் கூட சோடை போகவில்லை  என்பதோடு எந்தப்பாடலிலும்  இறைச்சல் இல்லை. வித்யாசாகரின்  பாடல்களை படமாக்கிய விதத்தில்  மட்டுமல்ல, ஒரு மென்மையான  காதல் கதை என்பதற்கான ஓளிஅமைப்பையும், காம்போஸிசனையும் கொண்டுவந்து  விடுகிறார் ஒளிபதிவாளர் ஏகாம்பரம். பொட்டானிக்கல் கார்டனில் பூத்துகுலுங்கும் பூக்கள் அத்தனையும் சிந்தெடிக் பூக்கள் என்பது தெரியாமல் செய்திருக்கும் கலைஇயக்குனர் மணி சுசித்ராவின் கை வண்ணம் மொத்த படத்திற்கும் ரிச் லுக் கொடுத்து விடுகிறது.

காவலனுக்கு கதையும், சித்திக்கின் இயக்கமும், விஜயின்  நடிப்பும், வித்யா சாகரின்  இசையும் எத்த்னை ப்ளஸோ… அதே அளவுக்கு படத்துக்கு உயிரூட்டியிருப்பது குரு என்ற புதியவரின் வசனங்கள். மொத்தத்தில் காவலன் ரசிகர்களின்  நேரத்தை மதிக்கத் தெரிந்த  காதலின் காவலன்.

0 comments:

Post a Comment