Pages

Friday, January 21, 2011

வெற்றிமாறனின் அசத்தலான 'ஆடுகளம்!'


வெற்றிமாறனின் கதைக்களம், கதை சொல்லும் உத்தி, டீட்டெயிலிங், கதா பாத்திரங்களின் குணவியல்புகளின் சித்தரிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

பொல்லாதவன் படம் இறுதிக்காட்சியில் தொடங்கும். தனுஷ் 'எல்லாம் இந்த பைக்கால தான்' என்று சொல்லும்போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது, யோசிக்கவைத்தது! ஒரு புதிய களத்தில், நிழல் உலகம் பற்றி, ஒரு உலக சினிமா போன்ற லாவகத்துடன் பயணிக்கும் கதையில் தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் மற்றும் ஒற்றை ஆளாக தனுஷ் பலரைப் போட்டுப் புரட்டி எடுக்கும்போதே அது தமிழ் சினிமாவானது!

பொல்லாதவன் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை, ஒரு மசாலாப் படமாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. நான் பொல்லாதவன் நல்ல படம் என்று சொன்னபோது சில நண்பர்கள் பார்த்த பார்வை அப்படியே தோன்றியது.    

ஆடுகளம் 
பொல்லாதவன் போலவே இறுதிக்காட்சியில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது!

-எப்போதும் அடிக்கிறாய்ங்க, கொல்றாய்ங்க என்று சண்டைக்கு ரெடியாக பொருளுடன் அலைவது.
-போவோர் வருவோரிடம் 'லந்து' கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு காரெக்டர்
-நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேசுதல் அல்லது இடைவெளி விடாமல் பேசுதல்
என்ற வழமையான மதுரை டெம்ப்ளேட் படங்களில் இருந்து வேறுபட்டு, புதிய களத்தில்.

சேவற்சண்டையை ஒரு பொழுபோக்காக கொள்ளாமல் தமது வாழ்க்கை, தன்மானம், கௌரவம் எல்லாவற்றையும் அதனூடாகவே பார்க்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

தனி ஒரு மனிதனின்(பேட்டைக்காரன்) தான் சீடன் தன்னை மிஞ்சிவிட்டான், தான் உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம், அவமான உணர்வின் வலி, தொடரும் சில நிகழ்வுகளால், வன்மமாக மாறி, பழிவாங்கலாக முடியும்போது அது சிலபேரின்(கருப்பு, பேட்டைக்காரன், மீனாள், ஐரீன், துரை, ஊளை) வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பேசுகிறது படம்.

பேட்டைக்காரன் - ஜெயபாலன்  
இவரின் பார்வை ஒன்றே எல்லா செய்திகளையும் அநாயாசமாகக் கூறிச்செல்கிறது, அரையிருட்டான காட்சிகளில் வன்மம், குரோதம் பளபளக்கும் கண்களில். இறுதிக்காட்சியில் ஆற்றாமை, குற்றவுணர்வு எல்லாமே கண்களில்.

கருப்பு - தனுஷ் 
புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தனுஷின் திறமைக்கு தீனி போடும் ஒரு அருமையான வாய்ப்பு. எப்பொழுதுமே தனுஷ் ஒரு டைரக்டரின் ஆளுகைக்குட்பட்ட நடிகராகவே இருப்பது அவரின் பிளஸ். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வெள்ளந்தியான மனதுடன், விசுவாசம், கொண்டாட்டம் என்று மனிதர் அசத்துகிறார்.

துரை - கிஷோர் 
எந்த இடத்திலும் மிகைப்படாத ஒரு நடிப்பில். ஒரு அண்ணன் போல கருப்புவிற்காக பேட்டைக்காரனிடம் பரிந்து பேசுவதில், அவனுக்கு வாழ்க்கையில் செட்டிலாக வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிந்ததும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்ளச் செய்வது, கருப்பு ஓவராகப் போவது போல தெரிந்தால் அடக்கி வைப்பது என மிகக் கச்சிதமான நடிப்பு! பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு படங்களிலும் அசத்தியிருக்கும் என்னைக் கவர்ந்த, தமிழ் சினிமாவினால் நன்றாகப் பயன்படுத்தப்படாத ஒரு நடிகர்.
          
கருப்புவின் தாய், மீனாள், அயூப், ஊளை, ஐரீனின் நண்பன், போலீஸ் அதிகாரி என்று எல்லோரும் நிறைவாக! முதல் பாதியில் பெரும்பான்மை பாத்திரங்களின் டீட்டெயிலிங்கிலேயே சென்று விடுவதால் நீளமாய் இருப்பதுபோல தோன்றினாலும் இந்த மாதிரியான கதைக்கு அது தவிர்க்க முடியாதது, அவசியமானதாகவே தோன்றுகிறது.

அசத்தலான சேவல் சண்டைக்காட்சிகள், ஒரு ஹீரோ - வில்லனின் சண்டைக்காட்சிகளுக்கு நிகராக, 'சீட்' நுனிக்கு ரசிகர்களை கொண்டுவருவது போல. படத்தில் அதைப்போல் மனிதர்களின் சண்டை கவரவில்லை என்பதற்கு திரையரங்கில் சேவற்சண்டையின்போது நிலவும் நிசப்தமே சான்று.

சில இடங்களில் குறிப்பாக இறுதிச் சண்டைக்காட்சியில் கருப்புவின் சேவல் தலையைக் குனிந்து கொண்டு பார்க்கும் காட்சியில், சில இரத்தம் தெறிக்கும் காட்சிகளில் மட்டுமே கிராபிக்ஸ் என்பதை உணர முடிகிறது!

ஒரு காட்சியில் சண்டையை நேரடியாகக் காட்டாமல், சுற்றி நிற்கும் மனிதர்களின் முகங்களில் தெரியும் உணர்வுகளின் மூலம் சண்டையின் போக்கு சொல்லப்படுதல் அருமையான உத்தி.

முதலில் இன்னொருவனின் தொல்லையிலிருந்து தப்ப கருப்புவைக் காதலிப்பதாகச் சொல்லும் ஐரீன் பின்பு நண்பர்களாக இருப்போமென்று கூறுவது வரை சரியே.பின்பு ஏன், எப்படி காதலியானாள் என்பது அழுத்தமாக கூறப்படவில்லை. அதுவும் கருப்பு மூன்று லட்சம் ஜெயித்த பின்பு காதலை ஏற்றுக்கொள்வது...'தப்பா தெரியுதே மாப்ள!'.

இந்தப்படத்திலும் (பொல்லாதவன் போலவே) காதல் தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது! ஆனால் காதல் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாகவே! குறிப்பாக 'யாத்தே யாத்தே' பாடலில் தனுஷின் ஆட்டம், நிலைகொள்ளாமல் நகரும் காமெரா என அதிலுள்ள உற்சாகமான கொண்டாட்டமான மனநிலை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது!

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை ஓக்கே! சில இடங்களில் குறிப்பாக சேவற்சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது! எங்கோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசித்த போதே பார்த்தி சொன்னான் Pirates of the Caribbean, Gladiator படங்களில்....!

வழமையான தமிழ் சினிமாவில் வரும் சில எதிர்பார்ப்புகளைத் தூண்டும் காட்சிகள் வந்து, ஆனால் அப்படி நிகழாமல் செல்வதே புதுமையாக உள்ளது. பந்தயத்தில் தோற்று மொட்டையடிக்கும் போலீஸ் அதிகாரி, பேட்டைக்காரனின் உண்மையான முகத்தை அறியும் கருப்பு என்ன செய்கிறார்கள் என்பதே அது.

ஒரு மோசமான ஒளி, ஒலியமைப்புள்ள திரையரங்கில் பார்த்ததால் படசான்றிதழே இருட்டாக, பிறகு படம்வேறு இரவுக்காட்சிகள் அதிகமா, மொத்தத்தில தியேட்டர்லயே திருட்டு DVDல பார்த்த எபெக்ட். ஒரிஜினல் DVD வந்ததும் வாங்க வேண்டும்! 

மொத்தத்தில தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அருமையான படைப்பு! நல்ல படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்!

0 comments:

Post a Comment